டி.டி.வி. தினகரனின் வலது கரமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை: முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் நேற்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தின் பொற்காலமாக திமுக ஆட்சி மாறி இருக்கிறது என்று பழனியப்பன் கூறினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த நிலையில், டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை அடைந்தது. இதையடுத்து, அங்கிருந்து பல நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், டிடி.வி தினகரனுக்கு வலது கரமாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். மேலும் சசிகலாவுக்கு தீவிர விசுவாசியாகவும் விளங்கி வந்தார்.

டி.டி.வி தினகரன் மீது அதிருப்தி கொண்ட பழனியப்பன் திமுகவில் விரைவில் இணைய உள்ளார் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த பழனியப்பன் தனது 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.அதிமுக ஜெயலலிதா ஆட்சியின் போது உயர்கல்வித் துறை அமைச்சராக பழனிப்பன் பதவி வகித்து வந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரன் பக்கம் சாய்ந்து சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அமமுகவில் இருந்து பலரும் வெளியேறி சென்று கொண்டிருந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தார். தற்போது இவரும் திமுகவில் இணைந்துள்ளது டி.டி.வி தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிமுக தலைமை ஏற்கனவே தள்ளாடி வரும் நிலையில் சசிகலாவும், அதிமுக தொண்டர்களுடன் தொடர்ந்து பேசி கூடுதல் நெருக்கடியை கொடுத்து வருகிறார். தேர்தலில் படுதோல்வியால் அமமுகவுக்கு ஒரு பக்கம் தவியாய் தவித்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளை பலர் பாராட்டி வரும் நிலையில், அதிமுக, அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் தொடர்ந்து இணைந்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அதிமுகவினர் இணைந்தனர்

கரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, மொஞ்சனூர் இளங்கோ எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் அமமுகவினர்  திமுகவில் இணைந்தனர்

வேலூர் மத்திய மாவட்டம், அமமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சி.ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.என்.பத்மநாபன், பேர்ணாம்பட்டு  நகரச் செயலாளர் எஸ்.செந்திலழகன், மாவட்ட பேரவை செயலாளர் கே.கோபி,  அல்லாபுரம் மேற்கு பகுதி செயலாளர் வி.வி.குமார், பொதுக்குழு முன்னாள்  உறுப்பினர் வளத்தூர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,  அமைப்புசாரா கட்டட பிரிவு மாவட்டச் செயலாளர் டிடிஎம்.சிவா உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் அணிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: