சீன எல்லையில் விபத்தில் பலியான திருச்சி ராணுவ வீரர் உடல் 21 குண்டு முழங்க அடக்கம்: அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் - ராஜம்மாள் தம்பதியின் மகன் தேவானந்த்(25). திருமணமாக வில்லை. ராணுவ வீரரான இவர், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தார். கடந்த மாதம் 30ம் தேதி பணியை முடித்துவிட்டு ராணுவ டிரக்கில் 6 பேருடன் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரக் வாகனம் தடம்புரண்டு மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தேவானந்த் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தகவலை ராணுவ அதிகாரிகள், தேவானந்த் குடும்பத்திற்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேவானந்த் உடல் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் மாலை பெங்களூரு வந்தது. அங்கு ராணுவ மரியாதைக்கு பின்னர் ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி திண்ணியம் மணக்கொல்லை கிராமத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேவானந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், தேவானந்த் தாய்க்கு ஆறுதல் கூறினர்.

எம்பி திருச்சி சிவா, கலெக்டர் சிவராசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தேவானந்த் உடலுக்கு , அவர் பணிபுரிந்த முகாமை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் நாயக் சுபேதார் கோடீஸ்வரன், அந்தோணி மற்றும் திருச்சி 117வது பிரதேச ராணுவ படை கர்னல் ஞானசேகர், கேப்டன் ரானா ஆகியோர் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: