திருவள்ளூர் ஜுவல்லரியில் போலி நகை கொடுத்து மோசடி: உ.பியை சேர்ந்த 2 பெண் உள்பட 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டபுரம் தெருவில் நகை கடை நடத்தி வருபவர் விமல் சந்த் (62). இவரிடம் கடந்த 30ம் தேதி 2 பெண்கள் கடைக்கு வந்தனர். அவர்கள், 8 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கி சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் மதியம் ஒரு மணியளவில் மற்றொரு பெண், அதே கடைக்கு வந்து 14 கிராம் எடையுடைய பிரேஸ்லெட்டை கொடுத்து 14 கிராம் புதிய நகைகளை வாங்கி சென்றார். நேற்று அந்த நகைகளை உருக்கி பார்த்தார் விமல் சந்த். போலி நகை என தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் நகர போலீசில் விமல் சந்த் புகார் செய்தார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்ஐ ராக்கி குமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் சந்தேகத்தின் பேரில் லாரியில் தப்பிக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பரமேசன், அவரது மனைவி மானசி (40) மற்றும் ரவிகுப்தா, அவரது மனைவி (30) என்பதும் தெரிந்தது. இவர்கள், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும், சாலையோரம் தங்கி, போலி நகைகளை நகைக்கடையில் கொடுத்து புதிய நகைகளை வாங்கி ஏமாற்றி வந்ததும் தெரிந்தது. அவர்கள், வேறு எங்கெல்லாம் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

Related Stories: