கொரோனாவுக்கு குடும்பமே பலி கைக்குழந்தையுடன் வந்த பெண் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு-அரசு நிவாரணம், வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் : கொரோனாவுக்கு கணவரின் குடும்பமே பலியான நிலையில், ஆதரவற்ற தனக்கு அரசு நிவாரண நிதியையும், வேலை வாய்ப்பினையும் உடனடியாக  வழங்க கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கைக்குழந்தையுடன் வந்த பெண்  மனு அளித்தார்.சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த விஜயபாலாஜி மனைவி ஜெயபாரதி  என்பவர் நேற்று தனது இரண்டு பிள்ளைகளுடன் விழுப்புரம் ஆட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது  கணவர் விஜயபாலாஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக  விழுப்புரம் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே  மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில்  தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சில  நாட்களில் இறந்து விட்டார். நாங்கள் கடந்த 2014ம் ஆண்டு  கலப்பு  திருமணம் செய்து கொண்டோம். தற்போது 6 வயதில் ஒரு மகனும், மூன்று மாத பெண்  கைக்குழந்தையும் உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளை பராமரிக்க  என்னிடம் போதுமான பண வசதி இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறேன். எங்களை  அரவணைத்து பார்த்துக் கொள்ள எவரும் இல்லை.

மேலும் எனது மாமனார், மாமியாரும்  கொரோனா தொற்றினால் அதே மருத்து வமனையில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர்.  எனவே, தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக வழங்க  வேண்டும். மேலும் எனது குடும்ப சூழ்நிலை மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு  கல்வித் தகுதிக்கு ஏற்ப காவல்துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: