ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு டிஏ தருவது பற்றி அறிவிக்கவில்லை: நிதி அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு வழங்கப்படும் என வெளியான தகவலை ஒன்றிய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 17 சதவிகித அகவிலைப்படியில் 4 சதவிகிதம் மேலும் உயர்த்தப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு அரசு அறிவித்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், மொத்தமாக 21 சதவிகித அகவிலைப்படியும் நிறுத்தி வைக்கப்பட்டது. இது ஜூலை 1 முதல் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இதை ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், அது பற்றிய அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டு இருப்பதாக கூறி, சமூக வலைதளங்களில் அந்த ஆணையின் நகல் வெளியிடப்பட்டு இருந்தது.

  இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சமூக வலைதளங்களின் மூலம் ஒரு அரசாணை பரவுகிறது. அது போலியானது. அகவிலைப்படி உயர்வு வழங்குவது பற்றி அரசு எந்த உத்தரவையும் வெளியிடவில்லை,’ என்று விளக்கம் அளித்துள்ளது.

கொள்ளையடிக்க முயற்சிப்பதா?

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வெளியிடும்படி காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டுக்காக சேவையாற்றும் 113 லட்சம் ஊழியர்களின் (ஓய்வூதியர்கள் உட்பட) பணத்தை கொள்ளையடிக்க அரசு முயல்கிறது. இது, கிரிமினல் குற்றம். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: