வரத்து குறைவால் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு வஞ்சிரம் கிலோ ரூ.1000: விலை உயர்வை கண்டு கொள்ளாமல் வாங்கி சென்ற மக்கள்

சென்னை: சென்னையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்குவதற்காக குவிந்தனர். மீன் விலை அதிகமாக இருந்தாலும் அதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் வாங்கிச் சென்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் மீன்பிடி தடைகாலம் முடிந்து, மீனவர்கள் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகளவில் மீன்கள் விற்பனை நடக்குமென சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க குவிந்தனர்.

ஆனால் பொதுமக்கள் விரும்பி வாங்கும் வஞ்சிரம், சங்கரா, பாறை, இறால் போன்ற மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைத்தனர். மேலும் சிறிய வகை மீன்களான தும்பிளி, நாம்பரை, காரை போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு இருந்தன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் காசிமேடு மார்க்கெட்டில் தும்பிளி மீன் ஒரு கூடை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சங்கரா ஒரு கூடை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையும், இறால் வகைகள் ரூ.300 முதல் ரூ.900 வரையும், வஞ்சரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து விசைபடகு மீனவர்கள் சங்க செயலாளர் விஜயேஷ் கூறுகையில், ‘‘இன்று காசிமேடு பகுதியில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. மீனவர்களின் வலையில் சிறிய வகை மீன்களே அதிகம் சிக்கின. இதனால் விலையை குறைத்து விற்பனை செய்யவேண்டியது இருப்பதால் மீனவர்கள் வருத்த மடைந்துள்ளனர்.  மேலும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டீசல் மீதான வரியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: