உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி சாவினுக்கு 22.6 ஆண்டு சிறை தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் காலை வைத்து கொலை செய்த வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.6 ஆணடுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.  அமெரிக்காவில் கடந்தாண்டு மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர், கடையில் திருடியதாக கைது செய்யப்பட்டார். அப்போது, அவரை சாலையில் படுக்க வைத்து கைவிலங்கு போடப்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரி அவரின் மீது ஏறி அமர்ந்து கைவிலங்கை மாட்டும் போது, டெரிக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி பிளாய்ட்டின் கழுத்தில் முட்டிக்காலை வைத்து அழுத்தி பிடித்தார். இதனால், பிளாட்டுக்கு மூச்சு விட முடியாத நிலை உருவானது. ‘என்னால் மூச்சு விட முடியவில்லை,’ என்று பலமுறை அவர் கெஞ்சியும், டெரிக் சாவின் தனது காலை எடுக்கவில்லை.

சிறிது நேரத்தில் பிளாய்ட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  மேலும், பிளாட்டின் கழுத்தை சாவின் முட்டுக்காலால் அழுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் இனவெறியுடன் நடந்து கொண்டதாக கூறி உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனால், டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மின்னசோட்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இதில், கடந்த ஏப்ரலில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதி பீட்டர் காஹில் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், டெரிக் சாவினுக்கு 22.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கருப்பினத்தை சேர்ந்தவரை கொன்றதற்காக அமெரிக்கா வரலாற்றில் ஒரு போலீஸ் அதிகாரி இந்தளவுக்கு பெரிய தண்டனை அளிக்கப்பட்டது கிடையாது. இதைத் தொடர்ந்து, டெரிக் சாவின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து, சிவில் உரிமை நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது. சாவினுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும்படி பிளாட்டின் குடும்பத்தினர் கோரினர். ஆனால், அவருக்கு 22.6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர். சிவில் உரிமை நீதிமன்றத்தில் அவருக்கு அதிகப்பட்ச தண்டனையை பெற்று தருவேன் என பிளாய்ட் குடும்பத்தினரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

12.6 ஆண்டை 22.6 ஆக மாற்றிய நீதிபதி

டெரிக் சாவின் செய்த குற்றத்துக்காக, அமெரிக்க  சட்டத்தின்படி 12.6 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால்,  டெரிக் சாவின் தனது அதிகாரத்தையும், அதிகாரி என்ற வகையில் அவர் மீது அரசு  வைத்த நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்து, கொடூரமான முறையில் கொலையில் ஈடுபட்டதற்காக 22.6 சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி காஹில் அறிவித்தார்.

Related Stories: