70 மாதங்கள் ஆனாலும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை விட மாட்டோம்: உமர் அப்துல்லா சபதம்

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை 70 மாதங்கள் ஆனாலும் கைவிட மாட்டோம்,’ என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு 2019ல் ரத்து செய்தது. இந்த மாநிலத்தையும் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாகவும் பிரித்தது. இதனால், அங்கு அரசியல் நடவடிக்கைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களின் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

இதில், இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது பற்றி மோடி விவாதித்தார். இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று கூறுகையில், “காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்,” என்றார். இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘70 வாரங்கள் அல்ல... 70 மாதங்கள் ஆனாலும் சரி... காஷ்மீருக்கு மீண்டும் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அது வரை கோரிக்கையை கைவிட மாட்டோம்,’’ என்றார்.

Related Stories: