கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறப்பு: ஆடி மாத பூஜைக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

கேரளா: கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு  வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. ஆடி மாத பூஜைக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதாவது அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையும், 5.15 முதல் 6.15 மணி வரையும், காலை 8.30 முதல் 10 மணி வரையும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 முதல் 6.15 மணி வரையும், 6.50 முதல் 7.20 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன. 

ஆனால் கருவறையில் இருந்து பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதங்கள் வழங்கப்பட வில்லை. கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்தியது. ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Related Stories: