நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு: தடுப்பூசி கொள்கை குறித்து காரசார விவாதம்

புதுடெல்லி: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், தடுப்பூசி கொள்கை குறித்து கேள்வி எழுப்பியதால், பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து விவாதிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழுக் கூட்டம் காங்கிரஸ் மூத்த எம்பி ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் காணொலி மூலம் நடந்தது. அதில், மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய ராகவன், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் வி.கே.பர்கவா மற்றும் உயிரி தொழில்நுட்ப செயலாளர் ரேணு ஸ்வரூப் ஆகியோர்  பங்கேற்றனர். தடுப்பூசி போடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் உருமாறிய வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த குழுவில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மற்றும் இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் ஆளும் பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட்டு, ‘தடுப்பூசி போடும் திட்டம் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வரும் இந்த நேரத்தில், தேவையற்ற சந்தேகங்களை கிளப்புவது பொருத்தமற்றது’ என்று கூறினர். மேலும், இந்த கூட்டத்தை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரி, வாக்களிப்பு நடத்த பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், பாஜக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வாக்குவாதம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடித்தது. அதன்பின் நடந்த கூட்டத்தில், தொற்றுநோயைக் கையாள்வதில் மருத்துவ, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகள் சிறப்பாக பணியாற்றி வருவதாக,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழு பாராட்டியது.

Related Stories: