ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்!: கடற்கரை, பூங்காக்களை தேடி படையெடுக்கும் மக்கள்..!!

மாஸ்கோ: கோடை காலம் தொடங்கிவிட்டால் ஒரு நாளை கழிப்பதற்குள் பெரும் பாடாகிவிடும். அந்த வகையில் ரஷ்யாவில் சுட்டெரிக்கும் வெயில் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்கா என குளிர்ச்சியான பகுதிகளுக்கு ரஷ்யர்கள் படையெடுக்கின்றனர். 

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள இந்த கடற்கரையில் ஜேஜே என மக்கள் குவிந்துள்ளது விடுமுறை தினமதை கழிக்கவோ அல்லது கொண்டாட்டங்களுக்காகவோ அல்ல. வெயிலை சமாளிக்க முடியாமல் தான் இவர்கள் முண்டியடித்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடி வந்துள்ளனர். இந்தியாவில் 40, 41 டிகிரி செல்சியஸ் என வெயில் கொளுத்துவது சர்வ சாதாரணம் என்றாலும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் நிலவும் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். 

என்ன தான் ஏசி போட்டாலும் சூட்டை தாங்க முடியாத மக்கள் அருகில் இருக்கும் கடற்கரைக்கு படையெடுக்கின்றனர். தலைநகர் மாஸ்கோவிலும் இதே நிலைமைதான். மாஸ்கோவில் கடந்த திங்கட்கிழமை பதிவான 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 120 ஆண்டுகளில் இல்லாதது என்று வானிலை மையம் கூறியுள்ளது. 

வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நகரின் மையத்தில் அரசு கட்டிடங்களின் எதிரே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளின் அருகே அமர்ந்துகொண்டு மக்கள் இளைப்பாறுகின்றனர். நீரூற்றுகளில் வரும் தண்ணீரில் விளையாடியபடி நீண்டநேரம் பொழுதை கழிக்கின்றனர். கடற்கரைகள், பூங்காக்கள் மட்டுமின்றி ஒருசிலர் ரஷ்யாவின் எகோடியா நகரில் பனிப்படலங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர். 

சூட்டை தனித்துக்கொள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பனிப்படலங்களில் உருண்டு விளையாடுகின்றனர். கோடை காலத்தில் இறைச்சி மற்றும் சூடான உணவுகளை தவிர்க்கும் ரஷ்யர்கள், ஐஸ்கீரிம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பருவநிலை மாறுபாடே வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

Related Stories:

>