முறையாக தூர்வாரியதால் கடைமடைக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்த காவிரி நீர்

*குறுவை சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் தீவிரம்

திருச்சி : முறையாக தூர்வாரப்பட்டதால் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துள்ளதால் சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 5.21 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்தும், 16ம் தேதி கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11கோடியில் 647 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. வெண்ணாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நீடாமங்கலம் மூணாறு தலைப்பை கடந்து, திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதியான முத்துப்பேட்டைக்கு வந்தடைந்தது.

இதே தண்ணீர் நாகை மாவட்ட கடைமடை பகுதியான இறையான்குடிக்கு 20ம்தேதியே சென்றடைந்தது. அதேபோல் காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்று பூம்புகார் கடைமுக கதவணை நீர்த்தேக்கத்தை அடைந்தது. இங்கிருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சென்று மேற்பனைக்காடு வழியாக தற்போது அறந்தாங்கி நாகுடி தலைப்பை நேற்றுமுன்தினம் இரவு அடைந்துள்ளது. அதேபோல் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்ட எல்லையிலிருந்து அரியலூர் மாவட்டம் திருமானூர் சென்றுள்ளது. கடைமடை பகுதியான அணைக்கரைக்கு இன்று இரவு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் வழக்கமாக ஒரு வாரத்துக்குள் கடைமடை பகுதிகளுக்கு செல்லும். ஆனால் இந்தாண்டு வழக்கமான நாட்களை விட ஓரிரு நாட்கள் முன்னதாகவே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆட்சியில் தண்ணீர் திறந்து பிறகு தான் தூர்வாரும் பணி பெயரளவுக்கு நடைபெறும். இந்தாண்டு முன்கூட்டியே போதிய நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி நடந்தது.

இதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தண்ணீர் திறந்து விடும் முன், தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். இதன் காரணமாக எந்த முறைகேடுமின்றி பணிகள் முடிந்துள்ளது. இதனால் தண்ணீரும் விரைவாக வந்து சேர்ந்துள்ளது என்றனர்.

3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. ஆறு, வாய்க்கால், கால்வாய்களில் தண்ணீர் செல்வதால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். போர்வெல் தண்ணீர் மூலம் சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் அடியுரம் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ஆற்றுப்பாசன விவசாயிகள் நாற்றங்கால் அமைத்தல் மற்றும் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இதனால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: