முதுகுளத்தூரில் திடீர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

சாயல்குடி : முதுகுளத்தூரில் நேற்று பெய்த கன மழைக்கு தெருத்தண்ணீர், கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் நகர பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஜார், பேருந்து நிலையம், முக்கிய தெருக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்த கூடிய இடங்களில் தண்ணீர் பெருகி ஓட வழியில்லாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

முதுகுளத்தூர் கீழரதவீதி, செல்லியம்மன் கோயில் தெரு, அய்யனார்கோயில் தெரு, மருத்துவமனை தெரு ஆகிய தெருக்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருக்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. மழை பெய்யும் காலங்களில் தெருக்களின் வழியே ஓடி வரும் தண்ணீர், வழிந்தொட அமைக்கப்பட்டு கால்வாய்கள் வழியாக சென்று வெளியேறுவது வழக்கம்.

ஆனால் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராமல் மண், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அருகில் புதிய பேவர்பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டதால் சாலையின் உயரம் அதிகரித்து, கால்வாயின் உயரம் குறைந்து போனது. இதனால் தெருவில் ஓடி வரும் தண்ணீர் ஓட வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Related Stories: