கருப்புப் பூஞ்சை நோய் குறித்துப் பொதுமக்கள் கவலைகொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கருப்புப் பூஞ்சை நோய் குறித்துப் பொதுமக்கள் கவலைகொள்ள வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், போஸ்ட் கோவிட் என்கின்ற, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பின்னால் அவர்களுக்கு வருகிற நோயினைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் இதுவரை 2,510 பேரைத் தாக்கியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் 8,000 பேரைத் தாக்கியிருக்கிற அந்தக் கருப்புப் பூஞ்சை நோய், தமிழகத்தில் 2,510 பேரைத் தாக்கியிருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும், கருப்புப் பூஞ்சைக்கான சிறப்பு வார்டுகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் எல்லா மருத்துவமனைகளிலும் கருப்புப் பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு அந்த நோய்க்கான அறிகுறி தென்படுகிறபோதே, தொடக்கத்திலேயே அவர்கள் மருத்துவமனைகளுக்கு வந்தால், நலம் பெற்றுத் திரும்பலாம் என்கின்ற அறிவுரையையும் விழிப்புணர்வாக எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கருப்புப் பூஞ்சையினால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 130 பேர் நலம் பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள்.

முதல்வர் அறிவுறுத்தலின்படி, கருப்புப் பூஞ்சைக்குத் தேவையான மருந்தான Amphotericin, Pasaconazole ஆகிய இரண்டு மருந்துகளும் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து போதுமான அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு, தேவையான அளவிற்கு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே, அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், பெரிய அளவில் கவலைகொள்ளத் தேவையில்லை. அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: