கள்ளக்காதல் விஷயம் வெளியே தெரிந்ததால் கணவனை கொல்ல ‘கூகுள்’ உதவியை நாடிய மனைவி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்

போபால்: ஹத்ராவில் கணவனை கொல்ல கூகுளில் சில தகவலை தேடி பார்த்து கொன்ற மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹத்ரா மாவட்டம் கெதிபூர் பகுதியை சேர்ந்த அமீருக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால், மகாராஷ்டிராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால், அவரது மனைவி தபூஸம், மற்றொரு நபருடன் கள்ளக்காதல் கொண்டிருந்தார். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்ததால், தனது சொந்த ஊருக்கு அமீர் வந்தார். அப்போது இர்பான் என்ற கள்ளக்காதலனுடன் தபூஸம் இருந்ததை பார்த்து அமீர் அதிர்ச்சியடைந்தார்.

இருந்தும், அப்போதைக்கு தன் மனைவியை கண்டித்துவிட்டு, வழக்கம் போல் வீட்டில் இருந்தார். இருந்தும், தன் கணவனுக்கு கள்ளக்காதல் விஷயம் தெரிய வந்ததால், அவரை கொல்வதற்கு தபூஸம் திட்டமிட்டார். அதற்காக, கூகுள் இணைய தேடலில், கொலை செய்வது எப்படி? பின்னர் கொலையில் இருந்து தப்பிப்பது எப்படி? கொலையை தடயங்கள் இல்லாமல் செய்வது எப்படி? என்றெல்லாம் தேடியுள்ளார். அவருக்கு கிடைத்த தகவலின்படி தனது கணவனை கொல்ல திட்டங்களை வகுத்தார்.

ஏற்கனவே, அமீருக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளதால், அவர் தினமும் மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கணவருக்கு ஆஸ்துமா மருந்துகள் எனக்கூறி மயக்க மருந்துகளை கொடுத்தார். அந்த மருத்துகளை எடுத்துக் கொண்ட அமீர், சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அதன்பின் அன்றிரவு தனது கள்ளக்காதலன் இர்பானை வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்ததும், அமீரின் கை கால்களை கட்டிப்போட்டு, தலையில் சுத்தியலால் தாக்கிக் கொன்றனர். தகவலறிந்த போலீசார் வந்து விசாரித்த போது, கொள்ளையர்கள் வீடுபுகுந்து கொன்றுவிட்டு தப்பிவிட்டதாக தபூஸம்  தெரிவித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், தபூஸமின் செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு தகவல்களை சேகரித்தனர். அதில், அவர் சம்பவம் நடந்த இரவு கள்ளக்காதலன் இர்பானிடம் பேசியதும், கூகுள் இணைய தேடலில் கொலை செய்வது குறித்து 15 மணி நேரம் தேடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கள்ளக்காதலனையும், தபூஸமையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>