நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி குறுவை பயிர் சாகுபடி செய்ய விவசாயத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். அந்த தண்ணீர் கல்லணை வந்தவுடன் கடந்த 16ம் தேதி அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

கல்லணையில் வெண்ணாற்றில் திறந்த தண்ணீர் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் நீடாமங்கலம் அருகில் உள்ள நகர் ஊராட்சி மூணாறு தலைப்புக்கு(கோரையாறு தலைப்பு) 1,322 கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீரை நேற்று நள்ளிரவு சிறிய வெண்ணாற்றில் 450 கன அடியும், கோரையாற்றில் 662 கன அடியும், பாமனியாற்றில் 210 கன அடியும், பொதுப்பணி துறையினர் சட்ரஸ் மதவுகளிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நீர் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து பயன் பெற உள்ளனர்.

மேலும் படிப்படியாக அதிகம் வரும் தண்ணீரை அனைத்து ஆறுகளிலும் திறக்கப்படும். மூணாறு தலைப்பிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் மேலும் பாமனியாற்றில் 48,357 ஏக்கர், கோரையாறு 1,20,957 ஏக்கர், சிறிய வெண்ணாற்றில் 94,219 ஏக்கர் விளை நிலங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி நிலங்களில் விவசாயம் செய்யவுள்ளனர். நேற்று நள்ளிரவு சிறிய வெண்ணாற்றில் திறந்த தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

ஆறுகளில் திறக்கப்பட்ட புதிய தண்ணீரை ஆற்று கரையோரம் உள்ள பெண்கள் சூடம் ஏற்றி தொட்டு வணங்கினர். இளைஞர்கள் சிலர் நீரில் வந்த மீன்களை பிடித்து தண்ணீரில் துள்ளி விளையாடினர். இந்த ஆண்டு முன் கூட்டியை மேட்டூரில் திறந்த தண்ணீரால் இரண்டு போகம் சாகுபடி செய்து பயன் பெறலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories:

>