சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் மத்திய அரசு முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்: ஜூலை 31ம் தேதிக்குள் முடிவு வெளியாகும்

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதை மீண்டும் பரிசீலிக்க இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ மாணவர்களுக்கு 30:30:40 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூலை 31ம் தேதிக்கு முன்னதாக வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக 2020ம் ஆண்டுக்கு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுதேர்வை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, இது பற்றி ஜூன் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதேபோல், இந்தியப் பள்ளிகள் சான்றிதழ் தேர்வுகள் வாரியத்தின் (சிஐஎஸ்சிஇ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி நடந்த விசாரணையின்போது, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்பதை தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது பற்றி பரிந்துரை செய்வதற்காக சிபிஎஸ்இ அமைத்த 13 பேர் கொண்ட குழு, சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்கள் இறுதியாக எழுதிய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறை பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இதில், 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30;30;40 என்ற சதவீத அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண், அகமதிப்பீடு மதிப்பெண்கள் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் சிபிஎஸ்இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளவற்றை இறுதி முடிவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த 2 கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகளையும் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

முன்னதாக, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘கிளாட் தேர்வு’ நேரடியாக நடக்க இருப்பதால்,  சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு ஏற்கவில்லை. ‘ஏற்கனவே, இந்த வாரியங்களின் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை. தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு அதில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கேட்கும்போது அதற்கான தீர்வுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ கல்வி வாரியங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  நீதிபதிகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு, திங்களன்று மேற்கண்ட கல்வி வாரியங்களில் படித்த மாணவர்களுக்கான மதிப்பீடுகளை நீதிமன்றத்தில் கூறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: