குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி  குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், அவருக்கு கடந்த 2017ல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என பாகிஸ்தானுக்கு தடை விதித்தது. மேலும், தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படியும், அவருக்கு தூதரக உதவிகளை வழங்கும்படியும் உத்தரவிட்டது.மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, குல்பூஷனுக்கு வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது, கடந்த மாதம் 7ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜூன் 15ம் தேதிக்குள் குல்பூஷனுக்கு வழக்கறிஞரை நியமிப்பதற்கு இந்தியாவிற்கு  மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம்  தெரிவித்தது. ஆனால், இந்திய அரசு இதை ஏற்க மறுத்தது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இந்திய வக்கீல் ஆஜராவது, தனது நாட்டின் இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது பற்றி மட்டுமே இனிமேல் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் காலித் ஜாவத் கானின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் அமர்வு, விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories:

>