மாநில வளர்ச்சிக்கான 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்கும் 24 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நோய் தொற்றை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாநில வளர்ச்சிக்கான 7 இலக்குகளை அறிவித்த முதலமைச்சர் 10 ஆண்டுகளில் அந்த இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தார். அதன்படி வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயிகள், குடிமக்கள் அனைவருக்கும் முறையான தண்ணீர், உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய இலக்குகளை அறிவித்தார்.

தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை காது கொடுத்து கேட்கும் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories:

>