இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது நியூசி.

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்னும், நியூசிலாந்து 388 ரன்னும் குவித்தன. 85 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்தது. ஸ்டோன் 15 ரன், ஆண்டர்சன் (0) இருவரும் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டோன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட, இங்கிலாந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசி. பந்துவீச்சில் மேட் ஹென்றி, வேக்னர் தலா 3, போல்ட், அஜாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 38 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசி. 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்து வென்றது. கான்வே 3, யங் 8 ரன்னில் வெளியேறினர். கேப்டன் டாம் லாதம் 23 ரன், டெய்லர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அறிமுக தொடக்க வீரர் கான்வே தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். வரும் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடங்க உள்ள நிலையில், இந்த வெற்றியால் நியூசிலாந்து வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>