புதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வரும் 16ம்தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்தலுக்கான தேதியாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின்றி சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஏம்பலம் செல்வம் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடுவது தொடர்பான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மதியம் வெளியானது.

அதன்படி சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி 15வது சட்டசபையின் முதல் கூட்டம் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்பட வேண்டுமெனவும், அன்றைய தேதியையே பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாகவும் நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புதுச்ேசரி சட்டசபையில் என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக 12 சீட் வைத்துள்ளது. பாஜ எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். உடனடியாக அவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார். இதையடுத்து நாளை கவர்னரிடம் அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமி வழங்குவார் என்று தெரிகிறது.

Related Stories: