ஜனவரி மாதம் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றன. அப்போது, வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர் ஆகிய 15 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

இதன்காரணமாக அந்த மாவட்டங்களில் நவம்பர் 24, 25, 29 மற்றும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதேபோல், அன்றைய தினம் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், டிட்வா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஓத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: