ஆம்புலன்ஸ், மினிலாரியில் மது கடத்திய 5 பேர் கைது

புதுச்சேரி: ஆம்புலன்ஸ், மினிலாரியில் மது கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி காந்தி வீதியில் மதுபான மொத்த விற்பனை கடை உள்ளது. அந்த கடையில் இருந்து, ஒரு வாகனத்தில் சிலர், அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, தமிழகத்துக்கு கடத்திச்செல்ல முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் வில்லியனூர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆம்புலன்சில் 3 பேர் மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தில் இருந்த சசிகுமார் (36), கார்த்திக் (24), சென்னை கொரட்டூர் கம்மாளர் தெருவை சேர்ந்த சபரிராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மது கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 192 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுஉச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்த போலீசார் அப்பகுதியில் பெங்களூருவில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த ஒரு மினிலாரி கோமுகி ஆற்றின் முட்புதர் பகுதியில் நின்றிருந்ததை பார்த்தனர். மேலும், மினிலாரியில் இருந்து  2 பேர் மதுபாட்டில்களை இறக்கி வைத்து கொண்டிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ராஜ்குமார்(31), செல்வம்(38) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து 66 பெட்டியில் 3168 மதுபானம் மற்றும் 60 லிட்டர் சாராயம் ஆகியவை கடத்தி வந்து பதுக்கி வைத்தது தெரியவந்தது. மதுபானம் மற்றும் மினிடெம்போ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: