அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழகத்தில் உள்ள 54 சித்தா மையங்களை கண்காணிக்கும் வகையில் வார் ரூம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழகத்தில் உள்ள 54 சித்தா மையங்களை கண்காணிக்கும் வகையில் வார் ரூம்  நேற்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மோகன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மருந்து தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்து மருந்து செய்யும் முறையை கேட்டறிந்தார். மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவிற்கு சென்று சிறிது நேரம் யோகா செய்து காண்பித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், இந்திய மருத்துவ துறை இயக்குநர் கணேஷ், இணை இயக்குநர்கள் டாக்டர் பார்த்திபன், டாக்டர் மணவாளன், மருந்து உரிமம் வழங்கல் அதிகாரி டாக்டர் பிச்சைய குமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியாதவது: தமிழகத்தில் முதல்வர் அறிவுறுத்தலின்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் 11, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் 2, யுனானி சிகிச்சை மையம் 1, ஓமியோபதி சிகிச்சை மையம் 1 என மொத்தம் 69 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் இரண்டு மடங்குகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கொரோனா நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு சித்தா கோவிட் கேர் மையம் குறைந்தது 100  இடங்களிலாவது செயல்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி 69 இடங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சித்த மருத்துவ வார் ரூம் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தமிழகத்தில் செயல்படும் 54  மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயின் தன்மை அறிந்து கொள்வதற்கு இந்த வார் ரூம் பயன்படும். ஏற்கனவே டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்வர் வார் ரூம் ஒன்றை திறந்து வைத்தார். அதேபோல, மாவட்ட தலைநகரங்களில் வார் ரூம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தை ஒருங்கிணைக்கும் வகையில் சித்தா வார் ரூம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூமை தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 73587 23063 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து சித்தா கோவிட் கேர் மையத்தின் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.   

தாயும், தந்தையும் இறந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு தான் நிவாரணம் தரப்படுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் புரளியை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையில்லை. மாற்றுத்திறனாளிகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க கட்டாயப்படுத்துவதில்லை. அப்படி எங்கேயாவது தவறுகள் நடப்பதாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளி ஒருவர் பணிமாறுதல் கேட்டு அழைந்தேன். என்னை 2 வருடமாக அலைய விட்டனர் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து அவரை நேரடியாக தொடர்பு கொண்டு அவரை  அழைத்து மருத்துவர் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஆலோசனை வழங்கி அவருக்கு உடனே பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்த இந்த அரசு தவறாது. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் இந்த மருத்துவத்துறைக்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு  அவர் கூறினார்.

* தேர்தல் அறிக்கை படி பன்நோக்கு மருத்துவமனை

கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 8.6 ஏக்கர் நிலப்பரப்பில்  650 படுக்கைகளுடன் வயது முதியவர்களுக்கான மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கோவிட் கேர் மையமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தென் சென்னையில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க புதிய பன்நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

Related Stories: