தினசரி இறப்பு 3,500க்கும் குறைவான நிலையில் ஒரே நாளில் 6,148 பேர் பலியா?.. பீகார் மாநில புள்ளி விபரத்தில் பெரும் குளறுபடி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி இறப்பு எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், பீகார் மாநில அரசு வெளியிட்ட புள்ளி விபரத்தில் ஏற்பட்ட குளறுபடி என்று கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கிய நிலையில், அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,052 ஆக உள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,91,83,121 ஆகவும், இதுவரை குணமடைந்தோர் 2,76,55,493 ஆகவும், கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் 1,51,367 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 3,59,676 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,67,952 ஆகவும் உள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 23,90,58,360 ஆகவும், இதுவரை 37,21,98,253 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 20,04,690 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 3,500க்கும் குறைவாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பீகார் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிபரத்தில் குளறுபடி இருந்ததால், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதுமாக இறப்பு எண்ணிக்கை இருமடங்காக (6,148) அதிகரித்துள்ளது. பீகாரில் ஒரேநாளில் 2,303 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாட்னாவில் 1,070 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து பெகுசராய் (316), முசாபர்பூர் (314), கிழக்கு சம்பரன் (391), நாளந்தா (222) என்ற அளவில் இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தினசரி இறப்புகளை பீகார் அரசு மறைத்ததால், தற்போது தனது புள்ளி விபரத்தில் அதிகரித்து காட்டியதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: