செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி அங்கு 2 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்றும் , 2வது டெஸ்ட் ஜூன் 18ம் தேதியும் செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது. டி20 ஆட்டங்கள் ஜூன் 26, 27, 29, ஜூலை 1, 3 தேதிகளில் கிரெனடாவில் நடைபெறும். டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரெய்க் பிராத்வெய்ட் தலைமையிலும், தென் ஆப்ரிக்கா அணி டீன் எல்கர் தலைமையிலும் களமிறங்குகின்றன.இந்த 2 அணிகளும் இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளன. அவற்றில் 1991-92ல் நடந்த முதல் டெஸ்ட் தொடரை மட்டுமே வெஸ்ட் இன்டீஸ் வென்றது. அதன் பிறகு 2014-15 வரை நடந்த எஞ்சிய 7 தொடர்களையும் தென் ஆப்ரிக்கா தான் வென்றுள்ளது. அவற்றில் 5 முறை வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் ஆகியுள்ளது.