கேரள காங்கிரஸ் தலைவராக எம்பி சுதாகரன் நியமனம்

திருவனந்தபுரம்:    கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. 2016ம் ஆண்டு தேர்தலை விட  இந்த கூட்டணிக்கு மோசமான தோல்வி கிடைத்தது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவரான முல்லப்பள்ளி ராமச்சந்திரனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தாரிக் அன்வர் திருவனந்தபுரம்  வந்து காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலானோர் கண்ணூர் எம்பியான சுதாகரனைத் தான் புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனாலும் மூத்த தலைவர்களான முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோரைத் தவிர்த்து சுதாகரன் புதிய தலைவராக நியமிக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, கண்ணூர் தொகுதி எம்பி சுதாகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஏற்கெனவே ரமேஷ் சென்னித்தலாவிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. புதிய எதிர்க்கட்சித் தலைவராக பரவூர் தொகுதி எம்எல்ஏவான சதீசன் நியமிக்கப்பட்டார்.

Related Stories: