ட்விட்டரில் இனவெறி, பாலியல் தகவல் பதிவு இங்கிலாந்து வேகம் ராபின்சன் இடைநீக்கம்

லண்டன்: இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் 8 ஆண்டுகளுக்கு முன்பு  ட்விட்டரில் தகவல் பதிவு செய்ததற்காக அறிமுகமான முதல் தொடரிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி, வேகம் ஆலிவர் எட்வர்ட் ராபின்சன் (27 வயது) அறிமுகமாயினர். முதல் நாளிலேயே 2 விக்கெட் எடுத்து அசத்திய ராபின்சன் பாராட்டுக்கு பதில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். காரணம்... போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து வீரர்கள் ‘இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்’ கருப்பு சீருடை அணிந்து உறுதி மொழி ஏற்றனர். கருப்பு சீருடையில் ஓல்லியை பார்த்தவர்கள் , ‘இனவெறிக்கு ஆதரவான ஓல்லி, இப்போது நடிக்கிறார்’ என்று கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் கண்டனங்கள் அதிகரிக்க அன்று  மாலையில், ‘அறியாத வயதில் முதிர்ச்சியில்லாமல் சொன்ன கருத்துகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்று எனக்கு முக்கியமான நாளில், 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கருத்துகளுக்காக வெட்கப்படுகிறேன். நான் இன வெறியன் அல்ல. பாலியல் வெறியனும் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். 2 இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் 42 ரன் எடுத்து போட்டி டிராவில் முடிய உதவினார் ராபின்சன். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘ராபின்சன் 2012, 2013ல் பதிவிட்ட ட்விட்டர் தகவல்கள் ஒழுங்கு விசாரணையில் இருப்பதால் இனி நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தேசிய அணியில் இருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.

அதனால் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட், பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமதமான நடவடிக்கை என்றாலும், வாரியத்தின் நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், இங்கிலாந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலிவர் டோடென் ‘ட்விட்டரில் ராபின்சன் பதிவிட்ட தகவல்கள் தவறானவை தான். ஆனால், ஒரு டீன் ஏஜராக அவர் பதிவு செய்த கருத்துகளுக்காக இப்போது சஸ்பெண்ட் செய்திருப்பது கொஞ்சம் ஓவராக உள்ளது’ என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராபின்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஸ்பின்னர் டொமினிக் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

* முதல் டெஸ்ட் டிரா

இங்கிலாந்து - நியூசிலாந்து மோதிய முதல் டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 378 ரன்னும், இங்கிலாந்து 275 ரன்னும் எடுத்தன. 103 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 273 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்த நிலையில் (70 ஓவர்) ஆட்டம் டிரா ஆனது. சிப்லி 60, போப் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் 200 ரன் விளாசிய நியூசி. அறிமுக தொடக்க வீரர் கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: