5,000 குடும்பங்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கிய வியாபாரி

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 5,000 குடும்பங்களுக்கு 15 டன் தக்காளிகளை இலவசமாக வழங்கி வரும் வியாபாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் 30 ஆண்டுகளாக காய்கறி மற்றும் தக்காளி மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2020 கொரோனா காலகட்டத்தில் 2,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

அதே போல் இந்த ஆண்டும் நிவாரண உதவி வழங்க முடிவு செய்தார்.இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து 15 டன் தக்காளியை கொள்முதல் செய்தார். இதனை ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 2 கிலோ வீதம் நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.இது குறித்து மணிகண்டன் கூறுகையில், ‘‘30 ஆண்டுகளாக பொதுமக்களின் ஆதரவுடன் இந்த மார்க்கெட் பகுதியில் கடை நடத்தி வருகிறேன்.

 கொரோனா காலகட்டத்தில் சிரமப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து, தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறேன்.

மொத்தமாக ஒரே இடத்தில் வைத்து கொடுத்தால் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் வாடகைக்கு ஆட்டோ எடுத்து வீடு தேடி சென்று கொடுத்து வருகிறேன். ராமநாதபுரம் மக்களுக்கு தொடர்ந்து என்னால் இயன்ற உதவியை செய்வேன்’’ என தெரிவித்தார்.

Related Stories: