நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா விண்வெளி திட்டத்தில் கலக்கும் கோவை சுபாஷினி: ராக்கெட் ஒருங்கிணைப்புக்கு தலைமை

வாஷிங்டன்: சந்திரனுக்கு மனிதர்களுடன் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் லட்சிய திட்டத்தில், கோவையை சேர்ந்த சுபாஷினி ஐயர் முக்கிய பங்காற்றி வருகின்றார்.அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா,  விரைவில் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும்  ‘ஆர்ட்டெமிஸ்’  என்னும் லட்சிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. நாசாவின் இந்த திட்டத்தில் கோவையை சேர்ந்த பெண் பொறியாளர் சுபாஷினி ஐயர் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.  கோயம்புத்தூரில் பிறந்தவர் சுபாஷினி ஐயர். அங்குள்ள விஎல்பி ஜானகியம்மாள் கல்லூரியில் 1992ம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றாகர்.   இந்த கல்லூரியில்  மெக்கானிக்கல் பொறியியல்  பிரிவில் முதன் முறையாக  பட்டம் பெற்ற  பெண்களில் சுபாஷினியும் ஒருவர். இவர், கடந்த 2 ஆண்டுகளாக நாசாவில் பணியாற்றி வருகிறார். சந்திரனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் இவர் தலைமை தாங்கி ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக சுபாஷினி கூறுகையில், “நிலவுக்கு விண்வெளி வீரர்களை  அழைத்து சென்று  50 ஆண்டுகள் ஆகிறது. 2வது முறையாக விண்வெளி வீரர்களை  அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான ராக்கெட் தயாரிக்கப்பட்டு நாசாவிடம் ஒப்படைக்கப்படுவதை கண்காணிப்பதும், இதர தேவைகளை பூர்த்தி செய்து தருவதும்தான் எனது பங்காகும்,” என்றார். ஆர்ட்டெமிஸ் திட்டமானது,  எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அனுப்பவதாகும்.

Related Stories: