50 வண்டி மாடுகளுக்கு தலா 40 கிலோ வைக்கோல்: கால்நடை இணை இயக்குனர் வழங்கினார்

வேலூர்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் நாளை வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரகாலத்துக்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில் கொரோனா ஊரடங்கால் சாலையில் திரியும் நாய்கள் உட்பட கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் குதிரைகளை வைத்து பிழைப்பு நடத்துவோரும், மாட்டு வண்டிகளை வைத்து பிழைப்பு நடத்துவோரும் அவற்றுக்கு உணவு வழங்குவதில் சிக்கலை சந்தித்துள்ளனர். இதையறிந்து மனிதநேயமிக்க தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் பிராணிகள் நல சங்க துணை தலைவர் மற்றும் துவனி அறக்கட்டளை நிறுவனர் அனுஷாசெல்வம் சார்பில் சவாரி குதிரைகளுக்கும், தெரு நாய்களுக்கு உணவளிக்கவும் 550 கிலோ கோதுமை தவிடு மூட்டைகளும், தலா 50 கிலோ சிப்பம் கொண்ட மொத்தம் 550 கிலோ அரிசியும் கால்நடை இணை இயக்குனரகம் மூலம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நேற்று மாட்டு வண்டி வைத்துள்ளவர்களின் காளைகளுக்கு வைக்கோல் தீவனம் வழங்கப்பட்டது. வேலூர் அடுத்த கருகம்பத்தூர், சேண்பாக்கம், முள்ளிப்பாளையம், காட்பாடி கல்புதூர் பகுதிகளை சேர்ந்த 51 மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் 40 கிலோ எடை கொண்ட தலா 5 வைக்கோல் கட்டுகள் வழங்கப்பட்டன. வைக்கோல் தீவன கட்டுகளை கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் வழங்கினார். இதன் மொத்த மதிப்பு ₹45 ஆயிரம் ஆகும். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் அந்துவன் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: