அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டிய சூழ்நிலை மாறியது ஏலகிரி மலையில் குடிநீர் பிரச்சனையை 2 நாளில் தீர்த்து வைத்த எம்எல்ஏ: பொதுமக்கள் பாராட்டு

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீருக்காக போராடிய மக்களின் பிரச்சனைக்கு இரண்டே நாளில் தீர்வுகண்ட எம்எல்ஏ க.தேவராஜிக்கு ஊர்பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் காலனி வட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீரை தலையில் சுமந்து பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தனி பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்குமாறு அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்விற்காக வந்த எம்எல்ஏ தேவராஜியிடம் அங்குள்ள பொதுமக்கள் குடிநீர் பிரச்னை குறித்து கோரிக்கை வைத்தனர்.  கோரிக்கையின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட இரண்டே நாளில் பைப் லைன் அமைத்து அங்குள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதனால் இரண்டு வருடங்களாக குடிநீருக்காக போராடி வந்த மக்கள் எம்எல்ஏவின் நடவடிக்கையால் இரண்டே நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டதால் அவருக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: