ஐக்கிய நாடுகள் சபை திடீர் அறிக்கை அல்கொய்தா தலைவர் இன்னும் சாகவில்லை: ஆப்கான்-பாக். எல்லையில் பதுங்கல்

ஐநா: அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்வதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது. எகிப்தி நாட்டை சேர்ந்த அய்மான் அல்-ஜவாஹிரி, ஒசாமா பின்லேடனுடன் இணைந்து கடந்த 1988ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் ‘அல்கொய்தா’ தீவிரவாத அமைப்பை நிறுவினார். இதன் தீவிரவாதிகள் உலகம் முழுவதும் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகமான பென்டகன் மீது விமானங்களை கடத்தி மோதச் செய்து, மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஒசாமா பின்லேடனை வேட்டையாடுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை, அமெரிக்கா சிறப்பு படை சென்று பல ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொன்றது. அதன் பிறகு, அல்கொய்தா அமைப்பு அய்மான் அல்-ஜவாஹிரி கீழ் செயல்பட தொடங்கியது.

ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த இவர், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், அல்கொய்தா அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலிபான்களுடன் இணைந்த அல்கொய்தா தீவிரவாதிகளும், பிற வெளிநாட்டு தீவிரவாத சக்திகளும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர். அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் ஏதோ ஒரு பகுதியில் பதுங்கி வாழ்கிறார்.  உடல்நலக் குறைவு காரணமாக அவர் இறந்ததாக வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. ‘அவர் உயிருடன் இருக்கிறார். ஆனால், இயக்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமாக இருக்கிறார்,’ என்று ஐநா உறுப்பு நாடுகளில் ஒன்று கூறியுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: