சோக்சியை நாடு கடத்துவது இப்போது சாத்தியமில்லை டொமினிகா சென்ற இந்திய குழு வெறும் கையுடன் நாடு திரும்பியது: 7 நாட்களாக காத்திருந்தது கத்தார் தனி விமானம்

புதுடெல்லி: டொமினிகா நாட்டில் சிக்கி மெகுல் சோக்சியை அழைத்து வரச் சென்ற சிறப்பு விமானமும், சிபிஐ உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவும் வெறும் கையுடன் நாடு திரும்பியது. குஜராத்தை சேர்ந்த நீரவ் மோடியும், அவருடைய உறவினரும் ‘கீதாஞ்சலி’ என்ற மிகப்பெரிய நகைக்கடை நிறுவனத்தின் தலைவருமான மெகுல் சோக்சியும் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி விட்டனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. நீரவ் மோடி லண்டனில் சிக்கி, அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்துள்ளதால், அவரை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், மெகுல் சோக்சி கடந்த 2017ம் ஆண்டே இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்டு, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்று இருந்ததால், ்்அந்த நாட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்தான், டொமினிகா நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்ததாக சில தினங்களுக்கு முன் சோக்சி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, டொமினிகா நீதிமன்றத்தில் நடக்கிறது. சோக்சியை டொமினிகாவில் இருந்து நாடு கடத்தி வருவதற்காக, அந்நாட்டுக்கு இந்திய குழு சென்றுள்ளது. இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு விமானத்தையும், சிபிஐ பெண் அதிகாரி ஷர்தா ரவுத் என்ற அதிகாரி தலைமையிலான குழுவும் மத்திய அரசு அனுப்பி வைத்தது.  இந்த குழு அங்கு தங்கியிருந்து, டொமினிகா நாட்டு அதிகாரிகளிடம் சோக்சி மீது இந்தியாவில் உள்ள 11 வழக்குகள் பற்றி விளக்கம் அளித்து, அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொமினிகா அரசும் ஆதரவாக உள்ளது.

ஆனால், சோக்சியின் வழக்கறிஞர்கள் டொமினிகா நாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மீதான விசாரணையை, நீதிபதி பெர்னி ஸ்டீபன்சன் ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார். அடுத்த விசாரணை எப்போது என்பதை டொமினிகா அரசு மற்றும் சோக்சியின் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், சோக்சி நாடு கடத்தும் முயற்சி விரைவாக வெற்றி பெறவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால், டொமினிகாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு இருந்த இந்திய குழு, தாங்கள் சென்ற அதே சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு வெறும் கையுடன் கிளம்பினர். இந்நாட்டின் மரிகாட்டில் உள்ள மெல்வில்லே ஹால் விமான நிலையத்தில் சோக்சிகாக கடந்த ஒரு வாரமாக சிறப்பு விமானம் நிறத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஆன்குடிவா அமைச்சரவையில் சோக்சியை நாடு கடத்த முடிவு?

ஆன்டிகுவா பர்புடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதால் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதிக்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள், ஆன்டிகுவா அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டொமினிகா சிறையில் உள்ள சோக்சியை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளித்து, ஆன்டிகுவா நாட்டு பிரதமர் காஸ்டன் பிரவுன் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: