மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை பத்மா சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா முதல்வர் கீதாவிடம் 3 மணிநேரம் தீவிர விசாரணை: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சரமாரி கேள்வி

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தும் ஏன் அதை தடுக்க வில்லை என்று பத்மா சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. 3 மணி நேரம் நடந்த விசாரணையில், இருவரும் அளித்த பதிலை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். சென்னை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின்படி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

ஆசிரியர்கள் இரண்டு பேரும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும் என்று வாக்குமூலம் அளித்தனர். அதன்படி, பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தலைவர் சரஸ்வதி சம்மன் அனுப்பி இருந்தார். சம்மன்படி, பத்மா சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் ேநற்று காலை 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் ஆணையர் சரஸ்வதி முன்பு ஆஜராகினர். அப்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சூரியகலா, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் டாக்டர் சரண்யா ஜெயகுமார், உறுப்பினர் ராமராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணிக்கு முடிவடைந்தது.

விசாரணையின் போது, பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரிடம், மாணவிகள் ஆசிரியர் மீது டிவிட்டரில் பாலியல் தொடர்பாக பதிவு செய்தது உங்களுக்கு தெரியுமா, ஆன்லைன் வகுப்புகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தும் ஏன் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது.  பள்ளி வளாகத்தில் நடந்த பாலியல் தொந்தரவை ஏன் தடுக்க வில்லை. அரசு உத்தரவுப்படி உங்கள் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் புகார்கள் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதா, அந்த விசாரணை குழுவில் மாணவிகள் குற்றம்சாட்டிய ஆசிரியர் ராஜகோபாலனை நியமித்தது ஏன், மாணவிகள் உங்களிடம் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்தபோது அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்த மாணவிகளை நீங்கள் நீக்கி விடுவோம் என மிரட்டியதாக மாணவிகள் புகாரில் கூறியுள்ளார்களே. அதற்கு உங்கள் பதில் என்ன, கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் நாங்கள் செய்த தவறு பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும் என்று கூறுகிறார்களே, மாணவிகள் டிவிட்டரில் பதிவு செய்த அன்று பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு விசாரணைக்கு வந்த அதிகாரிகளை அவமதித்தது ஏன்,

மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி அறக்கட்டளை எடுத்த நடவடிக்கை என்ன, உங்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா, அதற்காக உங்கள் பள்ளியில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர். சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறாமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் அளித்த பதிலை வாக்குமூலமாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். மாணவிகளின் பாலியல் தொடர்பாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று இருவருக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் 120 புகார்

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை தொடர்ந்து காவல்துறை அறிவித்த வாட்ஸ் அப் எண்ணிற்கு நேற்று வரை 120 புகார்கள் பத்மா சேஷாத்திரி பள்ளி உட்பட பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் மீது வந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 40 புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

300 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  100 பக்கம் வாக்குமூலம் அளித்த ஆசிரியர் ராஜகோபாலன்

பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து தி.நகர் துணை கமிஷனர் ஹரிஹரன் பிரசாத் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி மற்றும் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தினர். 3ம் நாள் விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், மாணவிகளின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி அவர்களின் ஆபாச படங்களை பெற்றதையும் ஒப்புக்கொண்டார். மேலும், அந்த ஆபாச படங்களை வைத்து மாணவிகளை சிறப்பு வகுப்பின் போது மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததையும் ஒப்புக்கொண்டார். சில மாணவிகளை சினிமாவுக்கும், ஓட்டல்களுக்கும் அழைத்து சென்றது உண்மைதான்.

அப்போதுதான் சக ஆசிரியர்களுக்கு மாணவிகளை அறிமுகம் செய்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும், அதில் கர்ப்பமான சில மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைத்துள்ளார். ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாணமாக வந்து பாடம் எடுத்தபோதுதான், கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன் என்றும் மாணவிகளின் பாலியல் தொடர்பாக 100 பக்கம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 3 நாள் விசாரணைக்கு பிறகு  ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முகமது பரூக் வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: