கேரளாவில் கூட்டணியில் சேர ஆதிவாசி கட்சி தலைவியிடம் பாஜ நடத்திய பேரம் அம்பலம்: ஆடியோ ஆதாரத்தால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜ கூட்டணியில் சேருவதற்காக ஒரு கூட்டணி கட்சி தலைவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஒ.ராஜகோபால் வெற்றி பெற்றார். நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ கையில் இருந்த ஒரு தொகுதியும் பறிபோனது மட்டுமின்றி, பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த ஆதிவாசிகள் கட்சி தலைவியான ஜானுவுடன் கேரள பாஜ தலைவர் சுரேந்திரன் பேரம் பேசும் ஆடீயோ வெளியாகி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த ஜனநாயக அரசியல் கட்சி (ஜேஆர்சி) மாநில பொருளாளர் பிரஷிதா இதை வெளியிட்டுள்ளார். அதில், ‘பாஜ கூட்டணியில் சேர வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 கோடி, 5 தொகுதிகள், ஒரு மத்திய அமைச்சர் பதவி வேண்டும்,’ என்று ஜானு கூறுகிறார். இதை ஏற்க மறுக்கும் சுரேந்திரன் ரூ.10 லட்சம் தருவதாக கூறுகிறார். இது குறித்து ஜானு மறுப்பு தெரிவித்தபோதிலும், பாஜ தலைவர் சுரேந்திரன் இதுவரை இந்த ஆடியோ குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

* மெட்ரோமேனை தோற்கடிக்க சதி

கேரள சட்டசபை தேர்தலில் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. பாஜ அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஸ்ரீதரன் முதல்வராகவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அந்த தொகுதியில் ஸ்ரீதரன் தோல்வியடைந்தார். ஸ்ரீதரனை பாஜவினர் தான் திட்டமிட்டு தோற்கடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்த தொகுதியில் பாஜ 40074 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பெற்றது. பின்னர் பாஜ உறுப்பினர்கள் 7322 பேர் சேர்க்கப்பட்டனர்.

அதோடு மெட்ரோமேன் ஸ்ரீதரன் ஆதரவாளர்களின் ஓட்டுகள் என குறைந்தது 60 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் 50052 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில் பாஜவின் முக்கிய தலைவர் ஒருவர் மெட்ரோமேனை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருடன் சேர்ந்து டீல் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜ தேசிய தலைமைக்கு ரகசிய புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாஜ தேசிய தலைமை விசாரணை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Related Stories: