உள்நாட்டில் உருவாகும் 2வது தடுப்பூசி பயாலஜிக்கல் -இ நிறுவனத்திடம் 30 கோடி டோஸ் வாங்க ஒப்பந்தம்: ரூ.1,500 கோடி முன்தொகை

புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்துள்ளது. நாட்டில் தற்போது பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள், மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, ரஷ்யாவில் இருந்து அது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்- இ நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவாக்சினை தொடர்ந்து உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2வது தடுப்பூசியான இது, விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தின் முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன.

இந்த முடிவுகளில் ஏற்பட்ட நம்பிக்கையை அடுத்து, மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து, பயாலஜிக்கல் -இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு இறுதி செய்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,500 கோடியை முன்தொகையாக செலுத்த வேண்டும். அதன் முதல் கட்டமாக ரூ.40 கோடி முன்பணம் கொடு்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் என சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: