தமிழகத்தில் விரைவில் தனியார் ரயில் சேவை!: இம்மாத இறுதியில் ஒப்பந்த புள்ளிகளை திறக்க ரயில்வே திட்டம்..!!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, மும்பை, மங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் விரைவில் தனியார் ரயில் சேவைகள் தொடங்க இருக்கிறது. இதற்காக பெறப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளி ஆவணங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதை அடுத்து, ரயில் சேவையை வழங்க 10 பெருநிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்று ரயில்வேத்துறை தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். 

சென்னையை மையமாக வைத்து 11 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை,  திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, மங்களூரு, செகந்திராபாத் மற்றும் டெல்லி வழித்தடங்கள் தனியார் ரயில் சேவைக்காக அடையாளம் காணப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3,221 கோடி ரூபாய் என ரயில்வே துறை தகவலை தெரிவித்துள்ளது. தெற்கு மாவட்டங்களுக்கான தனியார் ரயில்களுக்கு தாம்பரம் ரயில் நிலையம் முனையமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. தண்டையார்பேட்டை ரயில் நிலையம், தனியார் ரயில்களின் பராமரிப்பு பணிமனையாக மாற்றப்படலாம் என்றும் தெரிகிறது. 

Related Stories: