சமூக இடைவெளியின்றி கியூவில் காத்திருந்து அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பித்த மக்கள்-தொற்று பரவும் அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப  விண்ணப்பங்களை பெறுவதற்காக சமூக  இடைவெளியின்றி  பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்கள பணி, நிவாரண உதவிகள் வழங்குதல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக இப்பணியிடங்களுக்கு புதிதாக  யாரும்  நியமிக்கப்படவில்லை. பலர் ஓய்வுபெற்ற நிலையில், அங்கன்வாடியில் ஊழியர்,  உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக கிடந்தன.இதையடுத்து  மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையானது 148 காலி பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டது. காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் பணிகள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.வில்லியனூர்,   திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்புற  கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வில்லியனூர் மூப்பனார் காம்பளக்ஸில் உள்ள  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மையத்தில் விண்ணப்பங்களை  அளித்தனர்.

பிராஜக்ட்-3ல் (அரியாங்குப்பம், மடுகரை வரை) வசிப்பவர்கள்  அரியாங்குப்பம் சீனுவாசா நகர் அலுவலகத்திலும், பிராஜக்ட்-4ல்   (முத்தியால்பேட்டை சுற்று பகுதிகள்) உள்ளவர்கள் முத்தியால்பேட்டை  அலுவலகத்திலும், பிராஜக்ட்-5ல் (முதலியார்பேட்டை, உழவர்கரை பகுதி)  வசிப்பவர்கள் சாரத்தில்   உள்ள  மகளிர் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை தலைமை அலுவலகத்திலும் நீண்டகியூவில் காத்திருந்து விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில்  நூற்றுக்கணக்கானோர் திரண்டு விண்ணப்பிக்க இம்மையங்களுக்கு வருவதால் அங்கு  சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே 5 ஆண்டுகளுக்கு  மேலாக அங்கன்வாடியில் தினக்கூலியாக பணியாற்றி  வருபவர்களில் ஒருபிரிவினர் தங்களை பணிநிரந்தரம் செய்தபிறகே புதிய நபர்களை  வேலையில் அமர்த்த  வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Stories: