திண்டுக்கல் அருகே டாஸ்மாக் குடோனில் மது திருடிய 3 வாலிபர்கள் கைது-வாகன சோதனையில் சிக்கினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் தாமரைப்பாடி அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு நிறுத்தப்பட்ட லாரியில் மதுபாட்டில்கள் திருட்டு போனதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது லாரியில் தார்ப்பாயை அகற்றிவிட்டு 96 மதுபான பாட்டில்கள் திருடியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11,520 ஆகும். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எம்.எம். கோவிலூர் பிரிவில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பிவிட, 3 பேரை மட்டும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர்கள் தர்மத்துப்பட்டி அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்த சகோதரர்களான லட்சுமணன்(26), விஜய்(23) மற்றும் உறவினர் விஜயகுமார்(25) என்பதும், தப்பியோடியவர் ராமன்(26) என்பதும் தெரியவந்தது.

இதில் பிடிபட்ட லட்சுமணனும், தப்பிய ராமனும் டாஸ்மாக் குடோனில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் சகோதரர் விஜய் மற்றும் உறவினர் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து மதுபான பாட்டில்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணன், விஜய், விஜயகுமார் ஆகிய 3 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 96 மதுபான பாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ராமனை தேடி வருகின்றனர்.

Related Stories: