வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.122 குறைப்பு: எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவிப்பு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.

அந்த 4 மாதத்தில் மட்டும் ரூ.225 உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.10 குறைத்தனர். கடந்த மாதம் (மே) விலையில் மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை நேற்று, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து அறிவித்தது. இதன்படி, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யவில்லை. அதேநேரத்தில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.122 குறைத்துள்ளனர்.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர், கடந்த மாத விலையான ரூ.825ல் நீடிக்கிறது. சேலத்தில் ரூ.843 ஆக உள்ளது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.809 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.835.50 ஆகவும் நீடிக்கிறது. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு, சென்னையில் 1,721.50ல் இருந்து ரூ.122 குறைந்து ரூ.1,599.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, சேலத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,683ல் இருந்து ரூ.122 குறைந்து ரூ.1,561 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.110 முதல் ரூ.125 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: