சென்னை: இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிராமப்புற கோயில்களில் எவ்வித ஊதியமின்றி பணியாற்றிவரும் பூசாரிகள் பயனடையும் வகையில் ரூ.4000 உதவித்தொகை வழங்க தாங்கள் ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதுமட்டுமன்றி அவர்களுக்கு 10 கிலோ அரிசியும் 15 வகை மளிகைப் பொருட்களும் வழங்க உத்தரவிட்டது பூசாரிகளின் வாழ்வில் ஒளியேற்றும். ஆனால், தமிழகத்தில் ஏறக்குறைய 69 ஆயிரம் கிராமப்புற கோயில்கள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் அரசு அறிவித்துள்ள உதவித்தொகை மற்றும் இதர வகை மளிகைப் பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
முன்னாள் முதல்வர் கலைஞர் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு நலவாரியம் அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பூசாரிகள் என்றைக்கும் நெஞ்சில் நிலைத்து வைத்துள்ளனர். கலைஞருக்கு கிராமப்புற கோயில் பூசாரிகள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். எனவே அந்த கோயில் பூசாரிகள் நல வாரியத்தை புதுப்பித்து 69 ஆயிரம் கிராமப்புற கோயில்களில் எவ்வித ஊதியமும் இன்றி பணியாற்றி வரும் அனைத்து பூசாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த நலவாரிய உறுப்பினர் அட்டையின் அடிப்படையில் 69 ஆயிரம் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கும் தாங்கள் அறிவித்துள்ள ரூ.4000 உதவித்தொகையையும் மளிகைப் பொருட்களையும் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.