பினராய் விஜயன் ‘அழைப்பு’ வேலை செய்கிறது தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் கடிதம்

ராஞ்சி: மாநில அரசுகள் நிதிச் சுமையால் தவித்து வரும் நிலையில், போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசே இலவசமாக வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார்.  அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வலியுறுத்த வேண்டுமென பாஜ அல்லாத மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிரதமர் மோடிக்கு ேநற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த 18-44 வயதினர் 1.57 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1,100 கோடி செலவாகும். ஏற்கனவே கொரோனாவால் நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த தொகை கூடுதல் சுமையை ஏற்படுத்தும், பொருளாதார சிக்கலை உருவாக்கும். தடுப்பூசியை மாநிலங்களே சுயமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. ஒரு இக்கட்டான சமயத்தில் மாநிலங்கள் தனித்துவிடப்படுவது இந்திய வரலாற்றில்  இதுவே முதல்முறையாகும்.

தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை நாங்கள் அணுகினாலும் அவர்கள் மாநில அரசுகளுடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. தகுதிவாய்ந்த அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நம்மால் 3வது அலை ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும். எனவே, 18-44 வயதினர்களுக்கும் போதுமான தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இதே போல், ஒடிசா சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு சரியான பதில் அளிப்பதில்லை’ என கூறி உள்ளார்.

மாநிலங்களிடம் 1.57 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளது

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘மத்திய அரசிடமிருந்து இலவசமாகவும், நேரடி கொள்முதல் வாயிலாகவும் மாநில அரசுகள் 23 கோடி தடுப்பூசியை பெற்றுள்ளன. இதில், வீணாக்கப்பட்டவை உட்பட 21 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 659 தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 1 கோடியே 57 லட்சத்து 74 ஆயிரத்து 331 தடுப்பூசிகள் மாநில அரசுகளின் கையிருப்பில் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: