தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நளினி, முருகனுக்கு பரோல் வழங்கினால் பாதுகாப்பு அளிக்க வாய்ப்பு இல்லை: சிறைத்துறையிடம் காவல்துறை அறிக்கை

வேலூர்: வேலூர் சிறையில் உள்ள நளினி, முருகன் ஆகியோர் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு அளித்துள்ள நிலையில், அப்படி வழங்கினால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வாய்ப்பில்லை என்று சிறைத்துறையிடம் காவல்துறை அறிக்கை அளித்துள்ளது.ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் முருகன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் உள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நளினியின் தாய் பத்மா(81)வை கவனித்துக் கொள்ளவும், இலங்கையில் இறந்த முருகனின் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு காரியம் செய்வதற்காகவும், 30 நாள் பரோல் கேட்டு நளினி, முருகன் ஆகிய இருவரும் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் மனு அளித்தனர். அந்த மனுக்களை டிஐஜி நிராகரித்தார்.

இதையடுத்து இருவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசின் உள்துறை செயலாளருக்கும் மனு அளித்துள்ளனர். இதற்கிடையில் இவர்களுக்கு பரோல் வழங்கினால், போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்து சிறைத்துறை சார்பில் மாவட்ட காவல்துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நளினி, முருகனுக்கு பரோல் வழங்கப்பட்டால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று காவல்துறை சார்பில் சிறைத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் உறவினர் வீடு

பரோல் கோரிய மனுக்களில் முருகனும், அவரது மனைவி நளினியும் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். அது நளினியின் உறவினருக்கு சொந்தமானது. இங்கு முருகன் மற்றும் நளினியின் தாய், மகள் அரித்ரா ஆகியோர் சில காலம் தங்கியுள்ளனர். இடையில் நளினிக்கு பரோல் கிடைத்தபோது சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரது வீட்டில் தங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: