லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிர்வாக அதிகாரியை மாற்ற வேண்டும்: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது

திருவனந்தபுரம்: லட்சத்தீவுக்கு மத்திய அரசால் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா படேல், சமீபத்தில் பல கெடுபிடி சட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டம், மது விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் உணவுடன் இறைச்சி வழங்குவதற்கும், பசுக்களை கொல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கெடுபிடி சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை கேரள சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் பினராய் விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில்ல, ‘‘லட்சத்திவு மக்களின் பாரம்பரிய வாழ்க்கை  முறையை அழித்து, காவி கொள்கையை அமல்படுத்தவும், பெரு நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கவுமே  இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சர்வாதிகார போக்கில் புதிய நிர்வாகி செயல்படுகிறார்’’ என்றார் அதைத்தொடர்ந்து லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர். தொடர்ந்து அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவில்லை: இதற்கிடையே, லட்சத்தீவு எம்பியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான முகமது பைசல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நிர்வாக அதிகாரி பிரபுல் படேல் பதவியேற்று 5 மாதத்தில் 15-20 நாட்கள் மட்டுமே லட்சத்தீவில் இருந்துள்ளார். லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை புரிந்து கொள்வதில் அவர் சற்றும் அக்கறை காட்டவில்லை’’ என்றார்.

குண்டர் சட்டம் ஏன்?

முதல்வர் பினராய் விஜயன் மேலும் பேசுகையில், ‘‘மாலத்தீவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லட்சத்தீவில் குற்றங்கள் மிகவும் குறைவாகும். அத்தகைய பகுதியில் குண்டர்  தடுப்பு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.  புதிய நிர்வாகியின் இந்த கெடுபிடி சட்டங்களை எதிர்த்து  போராடுபவர்களை அடக்குவதற்காக தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: