தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: பாஜ அல்லாத மாநில முதல்வர்களுக்கு பினராய் விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: ‘கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,’ என்று தமிழ்நாடு உள்பட 11 பாஜ அல்லாத இதர மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முறையாக தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மறுத்து வருகிறது. மாநிலங்கள் சொந்தமாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்கள் சொந்தமாகவே தடுப்பூசியை வாங்க சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா உள்பட  பாஜ அல்லாத இதர 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:

இந்த மோசமான சூழ்நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. மாநிலங்கள் சொந்தமாக தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் மாநில அரசுகளால் அதை வாங்க முடியாத நிலை உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் தடுப்பூசியை விற்பனை செய்வது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் ஏற்படுத்த மறுக்கிறது. போதுமான அளவு தடுப்பூசி இருந்தால் மட்டுமே நம்மால் 3வது அலையை சமாளிக்க முடியும்.  எனவே மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு போதிய தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வினியோகிக்க மத்திய அரசை நாம் இணைந்து வலியுறுத்த வேண்டும். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மட்டுமே கொரோனாவை நாம் வெல்ல முடியும்.   இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: