அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அகற்றும் பணி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆய்வு

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் தீவிர துப்புரவு பணியின்போது 5,500 கிலோ குப்பை அகற்றப்பட்டதை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆய்வு செய்தார். சென்னை அம்பத்தூர் மண்டலத்தில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மண்டலத்துக்கு உட்பட்ட 80, 84 மற்றும் 93 ஆகிய வார்டுகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு தெரு, தெருவாக குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இந்த பணிகளை அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் நேரடியாக பார்வையிட்டார்.

இதன்பின்னர் எம்எல்ஏ கூறியதாவது; கொரோனா தொற்று காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக 3வார்டுகளில் தீவிர துப்புரவு பணிகள் நடைபெற்றது. சுமார் 5, 500 கிலோ எடையுள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மற்ற வார்டுகளிலும் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின்போது, மண்டல அதிகாரி விஜயகுமாரி, செயற் பொறியாளர்கள் சதீஷ்குமார், சுந்தரேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: