தச்சநல்லூர் பகுதி சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் ஆறாக ஓடும் அவலம்-மாநகராட்சி கவனிக்குமா?

நெல்லை : தச்சநல்லூர் பகுதி சாலையில் பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாததால் அதில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீர்  நீண்ட நாட்களாக ஆறாக பெருக்கெடுத்து ஓடும் அவலம் தொடர்கிறது. இதனால் அவதிப்படும் மக்கள், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 நெல்லை டவுணில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பிரதான சாலையில் தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட குருநாதன்கோயில் பஸ் நிறுத்தம் அருகே முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் எதிரே உள்ள சாலையில் குடிநீர் விநியோகத்திற்காக பிரதான பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பைப்லைனோடு குடிநீர்த் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பைப்லைனில் நீண்ட நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டதாகவும், இருப்பினும் இது சரிசெய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் தொட்டியின் வழியே கசிந்தபடி வீணாக வெளியேறும் குடிநீர் நீண்டநாட்களாக சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இப்படி வீணாக வெளியேறும் குடிநீர் அருகேயுள்ள வயல்வெளிகளை சென்றடைந்ததும் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் உருக்குலைந்த சாலையில் காணப்படும் பள்ளங்களில் மேலும் குழி உண்டாக்கி  அதில் நாட்கணக்கில் தேங்கி நிற்பதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. குறிப்பாக அந்த பள்ளங்களில் கனரக வாகனங்கள் விழுந்து செல்வதால் அந்த இடத்தில் உள்ள சாலை மேலும் குண்டும் குழியுமாக மாறி வருவதால் இங்கு இரவு நேரம் வாகனங்களை இயக்குவதே பெரும் சவாலாக உள்ளதாக வாகனஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில்  மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் இதுபோன்ற குடிநீர் பிரச்னை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படாத நிலையில் கசிந்து வீணாக வெளியேறும் குடிநீர் நீண்ட நாட்களாக சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனை தருகிறது.

 இதனால் அவதிப்படும் மக்கள், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள்  இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?  என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதே போல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் வீணாவது தெரியவந்தால் அங்கேயும் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு மாநகர பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: