ஆவணங்கள் திரட்டும் பணி நடக்கிறது ஆவின் நிர்வாக முறைகேடு புகார்கள் விசாரிக்கப்படும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி

நாகர்கோவில்:  தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று அதிகாலை குமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் பால் வினியோகத்தை ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் பால்பண்ணை ரோட்டில் உள்ள மாவட்ட ஆவின் அலுவலகம் வந்த அவர், அங்கு பால் பொருட்கள் தயாரிப்பு கூடம், குளிரூட்டும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் நாசர் அளித்த பேட்டி :

ஊரடங்கு காலத்தில் தங்கு தடையின்றி ஆவின் பால் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கால்நடை தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம். முதல்வர் உத்தரவிட்ட பின்னரும் கூட சில பால் விற்பனை நிலையங்களில் ஆவின் பால் விலையை குறைக்கவில்லை என்று புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் 11 விற்பனை நிலையங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் தான், பால் கூட்டுறவு ஒன்றியங்களில் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இது 39 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.  விலை குறைப்புக்கு பின், தினமும் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாம். ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். தற்போது அது தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

குமரி ஆவினில் ரூ.1 கோடி இழப்பு

அமைச்சர் நாசர் கூறுகையில், குமரி மாவட்ட ஆவினில் கூடுதலாக  பணியாளர்கள் நியமனம் செய்ததால், ₹1 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டு  உள்ளதாக பால்வள நிர்வாக இயக்குனர் எழுதிய கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: