புயலில் இருந்து 2,100 பேர் மீட்பு: தாயின் இறுதிசடங்கை முடித்தவுடனே மீட்பு பணி..! ஒடிசா இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

புவனேஸ்வர்: இறந்த தாயின் இறுதிச்சடங்கை முடித்து உடனே புயலால் பாதித்த மக்களை பாதுகாக்க, ஒடிசா இன்ஸ்பெக்டர் பணிக்கு திரும்பியதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒடிசா மாநிலம் மார்ஷகாய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெஹெராவின் 85 வயதான தாயார், அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரின் தாயாருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், கடந்த 21ம் தேதி காலமானார். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் பெஹெரா, தனது தாயின் இறுதி சடங்குகளை பிஞ்சார்பூரில் உள்ள தங்கள் சொந்த கிராமத்தில் செய்துவிட்டு, அன்று மாலையே மார்ஷகாய்க்கு விரைந்தார். இதற்கான காரணம், ஒடிசா, மேற்கவங்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ‘யாஸ்’ புயல்தான். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பெஹெரா கூறுகையில், ‘எனது தனிப்பட்ட இழப்பை காட்டிலும், எப்போதும் பொது சேவைக்குதான் முன்னுரிமை அளிப்பேன்.

ஃபானி மற்றும்  ஆம்பான் போன்ற புயல்கள் ஏற்பட்ட போது, நான் பணியாற்றும் மார்ஷகாய் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. மக்களை பாதுகாப்பாக மாற்று இடத்தில் தங்க வைப்பதில் தீவிர கவனம் செலுத்தி உதவினோம். ‘யாஸ்’  புயலில் மார்ஷகாய் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஐந்து பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தோம். நானும் எனது சகாக்களும் தாழ்வான பகுதிகளில் இருந்து குறைந்தது 2,100 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். பலத்த காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளுக்கு இடையே, என் கிராமத்திற்கு சென்று என் தாயின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு உடனே பணிக்கு திரும்பினேன்’ என்றார்.

Related Stories: